Sunday 29 April 2012

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -8


அந்த கடிதம் கீர்த்தனாவின் அம்மாவின் கையிலே கிடைத்தது. யார் எழுதிய கடிதம் என பிரித்து பார்க்க தயார் ஆனாள். அப்போது பார்த்து அடுப்பில் வைத்திருந்த குக்கரில் இருந்து விசில் சத்தம் கேட்கவே கடிதத்தை வைத்து விட்டு சமையல் வேலைகளில் மூழ்கினாள். அதன் பின் கடிதம் வந்த நினைவே இல்லாமல் வேலைகளை முடித்து விட்டு கீர்த்தனாவுக்காக காத்திருந்தாள்.

கீர்த்தனா வந்ததும் முகத்தை கழுவி விட்டு தன் அம்மா கொடுக்கும் சூடான காஃபிக்கு காத்திருந்தாள். காஃபி போட்டு வருவதற்குள் மேஜை மீது இருந்த கடித்தை பார்த்ததும் பிரித்து பார்த்தாள். பெயர், முகவரி ஏதும் இல்லாமல் எழுதப் பட்டு இருந்தது.
கீர்த்தனாவின் பெற்றோருக்கு,

என் பெயர், முகவரி இவை எல்லாம் தேடி அலைய வேண்டாம். நான் சொல்ல போகும் விஷயம் மட்டுமே உங்களுக்கு மிக முக்கியம். தங்களின் ஒரே பெண்ணான கீர்த்தனா ஒருவனை காதலிக்கின்றாள். காதலிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இதற்கு முன் அவன் இரு பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி விட்டு இப்போது அவன் உங்கள் பெண்ணை ஏமாற்ற வந்துள்ளான். தங்களின் குடும்பத்தின் மீது உள்ள அக்கறையிலேயே இதை தெரிவிக்கிறேன்.
                                                               உங்கள்
                                                            நலம் விரும்பி.

கடிதத்தை படித்ததும் கீர்த்தனாவுக்கு வியர்த்துக் கொட்டியது. “அம்மா ஒரு வேலை இந்த லெட்டரை படித்து இருப்பார்களோ!! ச்ச சே. லெட்டர் தான் பிரிக்காம இருந்ததே. அப்புறம் எப்பிடி? கார்த்தியை பத்தி யாரு இப்பிடி மோசமா எழுதி இருப்பாங்க?” இப்படி ஓடிய அவள் சிந்தனையை “கீர்த்தி இதை குடி மா. யார்கிட்ட இருந்து லெட்டர் வந்துருக்கு?” என்ற அவள் அம்மாவின் குரல் கலைத்தது.

“அது ஒண்ணும் இல்லை மா. ஆஃபிஸ் ல இருந்து தான் வந்திருக்கு.” என்று கூறி சமாளித்தாள்.

“சரி கீர்த்தி மா. மளிகை சாமான் கொஞ்சம் வாங்க வேண்டி இருக்கு. போகலாமா?”

“சரி மா. ஒரு அரை மணி நேரத்தில போகலாம்.”

தன் அறைக்கு சென்றவள் லெட்டரை எடுத்து தன் ஹேண்ட் பேக்கில் ஒளித்து வைத்தாள். மறுநாள் அலுவலகத்திற்கு சென்று கார்த்தியை அழைத்து அந்த லெட்டரை காட்டினாள். கார்த்திக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “இது வரை நமது காதலை பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லையே. பின்னர் எப்படி உன் வீட்டிற்கு லெட்டர் வந்தது. யார் அனுப்பி இருப்பா?” என்று குழம்பினான். கீர்த்தி முகத்தில் கலவரம் நிலவியதை கண்டு அதிர்ந்தான் கார்த்தி.

“என்ன கீர்த்தி? நான் உன்னை ஏமாத்திடுவேணு நினைக்கிறியா?”

“ச்சா. உன்னை நான் எப்பிடி சந்தேக படுவேன்?”

“அப்புறம் ஏன்? முகம் எல்லாம் வாடி இருக்கு? என்ன நினைக்கிற கீர்த்தி?”

“யார் இந்த வேலையை பண்ணிருபாங்கணு தான் ஒரே குழப்பமா இருக்கு.”

“என்ன பத்தி நல்ல தெரிஞ்ச ஒருத்தங்க தான் இதை பண்ணிருக்கணும்.அதுவும் அவங்களுக்கு நம்ம லவ் பத்தியும் தெரிஞ்சு இருக்கு.சரி கீர்த்தி நீ ஒண்ணும் கவலை படாதே. “

“ஆனா கார்த்தி. அம்மா மட்டும் இந்த லெட்டரை படிச்சுருந்தா நம்ம காதலுக்கு எப்பவுமே ஒத்துக்க மாட்டாங்க. அது தான் என் பயமே. இப்போ என் கண்ணுல பட்டுச்சு. இதோட முடிஞ்சது. அடுத்து நம்மலை பிரிக்க அடுத்த முயற்சி பண்றதுக்குள்ள இதை பண்ணுனது யாருனு கண்டு பிடிக்கணும் கார்த்தி”.

“கண்டுபிடிச்சுடலாம் கீர்த்தி. நீ எதுக்கும் கவலை படாதே. “

என்ன தான் கீர்த்திக்கு ஆறுதல் கூறினாலும் கார்த்தியின் மனதே சஞ்சலத்தில் இருந்தது. தன்னை பற்றி கேவலமாக எடுத்து கூற யார் முன் வந்திருப்பார் என யோசனையில் ஆழ்ந்தான்.எப்படியேனும் கீர்த்தனாவை மணந்தே ஆக வேண்டும்.இனியும் தாமதிக்க கூடாது. அதற்கான முயற்சிகளை எடுப்பது பற்றி கீர்த்தனாவிடம் பேச வேண்டும் என சிந்தித்தான்.

No comments:

Post a Comment