Sunday, 29 April 2012

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 1 .


ம்யாவுடன் பார்த்திருக்கவேண்டிய தசாவதாரம் படத்தை இதோ படம் வெளிவந்து 57 நாட்கள் கழித்து இன்று , என் கைவிரல்களை கீர்த்தனாவின் கைவிரல்களோடு கோர்த்துக்கொண்டு, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விசயங்கள் எப்படி ஓரிழையில் இணைக்கப்படுகின்றது என கியாஸ் தியரி சொல்லி கமலஹாசன் கதையை ஆரம்பிக்க, கோவிந்தராஜப்பெருமாளை குலோத்துங்கச்சோழன் கடலில் வீசுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இப்படி கீர்த்தனாவுடன் நெருக்கமாக அமர்ந்து இந்தப்படத்தைப் பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் ரம்யா சென்னை வரும்பொழுது தன்னைச் சந்திக்கக்கூடாது என எனக்கு உத்தரவிட்டாளோ என்னவோ.. வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்திற்கும் கண்ணுக்குப்புலப்படாத தொடர்பு இருக்குமோ? தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

இப்போது கியாஸ் தியரி , பட்டர்பிளை எபெக்ட் என யோசிக்காமல் கீர்த்தனாவின் மென்மையான தொடுதலையே மனம் விரும்பியது. கீர்த்தனா என் கையில் இருந்த காயத்தழும்பைத்தடவிக்கொடுக்கையில் அந்த ஸ்பரிசத்தில் காமம் இல்லை எனப் புரிந்தது. கீர்த்தனாவிற்கு இடதுபுறம் எனது அலுவலகத் தோழிகள் வேறுசிலரும் வந்திருந்ததாலும், நாங்கள் அமர்ந்திருந்தது "B" வரிசையாகப் போனதாலும் கீர்த்தனாவை சமயம் வாய்க்கும்பொழுது முத்தமிடலாம் என்ற எண்ணத்தை செயல் படுத்தவேண்டாம் என முடிவு செய்தேன். அவளுக்கான முதல் முத்தத்தை பின்னால் இருந்து யாரேனும் கவனித்து விட்டால் அது அவளை சங்கடப்படுத்திவிடக்கூடும் என்பதால் அப்படி ஒரு அவசர முத்தத்தைக் கொடுக்க எனக்கு
விருப்பமில்லை. தாமதமானாலும் பரவாயில்லை, அவளுக்கான முத்தம் கண்ணியமானதாகவும் நீண்ட,ஆழந்த அன்புடனும் தயக்கமில்லாத ஒன்றாகவும் இருக்கவேண்டும்.

திரைப்படத்தில் அசின் பெருமாளே பெருமாளே எனக்கத்தும்பொழுதெல்லாம், கீர்த்தனாவின் காதில் "Je t'aime" சொல்லியபோது என் கைகளை மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். நான் ஏற்கனவே படத்தைப்பார்த்து இருந்ததால் இடைவேளை வர சில நிமிடங்களுக்கு முன்னர், என் கைகளை விலக்கிக்கொண்டேன். எல்லா விளக்குகளும் எரிய ஆரம்பிக்க, கீர்த்தனாவின் கண்களில் சிலநீர்த்திவலைகள் பனித்திருந்தன.

"உங்களுக்குப் பிடிச்சிருந்ததா, கீர்த்தனா"

"ம்ம்ம் ரொம்ப பிடிச்சிருக்கு கார்த்தி, தாங்க் யூ"

கீர்த்தனாவை எனது அலுவலக நண்பர்கள்,தோழிகள் மத்தியில் நான் மரியாதையாக அழைப்பதுதான் வழக்கம். எங்களுக்குள் குறைந்தபட்ச நட்புக்கூட இல்லை என அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கீர்த்தனாவின் விருப்பமும் அவ்வாறே. எனக்கும் அது சரியாகவேப்பட்டது. எனது முதல் காதல் பற்றி ஊருக்கெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டதில், அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் ஊத்திக்கொள்வதைப்போல தோல்வி அடைந்தது. ரம்யாவுடன் ஆன இரண்டாவது காதல் ஏதோ பரவாயில்லை முதலுக்கு மோசமில்லாமல் நட்பை மட்டும் தக்கவைத்துக்கொண்டு காதலை விலக்கியாகிவிட்டது. ரம்யாவுக்கும் அதுவே விருப்பம். அவள் என்னை ஆரம்பத்தில் இருந்தே நண்பனாக மட்டுமே பார்த்து வருகிறாள்.

என்னுடைய இந்த மூன்றாவது காதலுக்கு என்னுடைய முதல் இரண்டு காதல்கள்தான் காரணம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அட உண்மைதாங்க ..எப்படின்னு கேட்கறீங்களா? எனக்கு கீர்த்தனாவைப்பிடிக்கக் காரணம் என்னோட முதல் காதலி ஜெனி. கீர்த்தனாவிற்கு என்னைப் பிடிக்க காரணம் என்னோட இரண்டாவது காதலி ரம்யா. இத்தனைக்கும் இவங்க மூன்று பேரும் சந்தித்துக்கொண்டதே இல்லை.

கீர்த்தனாவை என் கண்களுக்கு கடைசி ஒரு வருஷமாத் தெரியும். என் மனதிற்கு கடைசி மூன்று மாதங்களாகத் தெரியும். போனவருடம் பிற்பகுதியில் எங்கள் அலுவலக வளாகத்தில் முதன் முதலில் கீர்த்தனாவைப் பார்த்தேன். அசப்பில் ஜெனியைப்போலவே இருந்ததால் ஏதோ ஒரு ஈர்ப்பு அவள் மேல ஆரம்பமானது. ஜெனி சம்பந்தப்பட்ட எந்த ஒரு நினைவும் கசப்பான அதிர்வுகளையே மனதில் ஏற்படுத்திவிடும். ஆனால் கீர்த்தனா ஜெனியைப்போல இருந்தாலும் ஜெனிக்கான "நெகட்டிவ் வேவ்லெங்த்" ஏதும் இல்லாததனால் கீர்த்தனாவை என் கண்கள் தேட ஆரம்பித்தது.. இருந்தபோதிலும் அந்த சமயங்களில் ரம்யாவுடனான என் காதலை நான் வெற்றி பெற வைக்க , விக்கிரமாதித்தன் போல மனம் தளாராமல் விடாமல் என் காதல் விருப்பத்தை ரம்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்ததாலும் வேலைப்பளுக்காரணமாக அடிக்கடி அலுவலக வளாகத்தில் சுற்ற முடியாததாலும் கீர்த்தனாவைப் பற்றி அதிக யோசனை இல்லை. எத்தனை தடவை வேண்டுமானாலும் காதலிக்கலாம். ஆனால் ஒரு சமயத்தில் ஒருவரை மட்டுமே காதலிக்கவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடுடன் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கும்.

"நான் எங்கேங்க இல்லைன்னு சொன்னேன், இருந்திருந்தா நல்லா இருக்கும்னு தானே சொன்னேன்" என கமல்ஹாசன் பக்தியைப் பகுத்தறிவுடன் கலந்தடித்து காதல் வசனம் பேசிக்கொண்டிருக்க , படம் முடியப்போகிறது என உணர்வு வந்து நிகழ்காலத்திற்கு வந்தேன்.

படம் முடிந்து வெளியே வந்து , உடன் வந்திருந்த அலுவலக நண்பர்களை வழியனுப்பிவிட்டு கீர்த்தனாவிடம் "நீ கண்டிப்பா ஊருக்குப்போகனுமா, "

"ஆமாண்டா, அப்பா கண்டிப்பா இன்னக்கே வரச்சொல்லி இருக்காரு" அவளுக்கு ஊருக்குப்போக விருப்பமில்லை என்பதை கண்களிலும் ஊருக்குப் போகவேண்டியக் கட்டாயத்தை வார்த்தைகளிலும் சொன்னாள்.

அசோக்பில்லரில் புதுச்சேரி பேருந்துவர அவளை பேருந்தில் ஏற்றிவிட்டு பேருந்து வளையும் வரை அவள் முகத்தைப்பார்த்துவிட்டு அவளின் கைபேசிக்கு அழைத்தேன். அவளின் முதல் வாக்கியம் "மீ டு, தாங்க் யூ" குரலில் வழக்கத்தை விட மென்மையாக இருந்தது. மற்றும் ஒரு மாலைப்பொழுது கீர்த்தனாவுடன் இனிமையாக தொலைபேசி உரையாடலில் கரைந்தது. நேரக் கரைதலில் காதல் வளர்ந்திருந்தது.

  
சில மாதங்களுக்கு முன் "ஒரு அடி Gap கொடுத்திங்கன்னா, அந்தப்பக்கம் போயிடுவேன்னு" நான் சொன்னபொழுது "ஒரு அடி வேண்டுமா?, ஒரு அடி வேண்டுமா " என ஸ்கேலை வைத்துக்கொண்டு கீர்த்தனா என்னிடம் முதன்முதலாக நான் ரசிக்கும்படியாக பேசியபொழுது மனதின் ஓரத்தில் கீர்த்தனாவிற்கு ஒரு இடம் தயாராகப்போகிறது என்ற ஆழமனம் சொன்னபொழுது மனம் கீர்த்தனாவைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வப்பட்டது.

"சுமதி, யாரு அந்த பொண்ணு, டிரெயினிங் ஏதும் வந்து இருக்காங்களா?"

"யாரும் புதுசா ஆபிஸுக்கு வந்திரக்கூடாதே, உடனே உன் என்கொயரி ஸ்டார்ட் ஆயிடுமே? டிரெயினி எல்லாம் இல்லை நம்ம எம்ப்ளாயிதான்? பேரு கீர்த்தனா"

"பார்க்க கியுட்டா இருந்தாங்க அதான் கேட்டேன், நத்திங் சீரியஸ், டெவலப்மெண்டா? அட்மினிஷ்ட்ரேசனா?"

"ம்ம்ம் மேனேஜ்மெண்ட், நம்ம கம்பெனிக்கு புதுசா வந்திருக்கிற கம்பெனி செக்ரட்டரி"

"ம்ம்ம் "


"புரொஜெக்ட் டிரெயினிங் வரப் பொண்ணுங்க கிட்ட கடலைப்போடுற மாதிரி ஏதும் பேசிக்கிட்டு இருக்காதே?"

"சரி சரி.. "

அடுத்து வந்த நாட்களில் கீர்த்தனாவின் ஊர் பாண்டிச்சேரி என்பதும் அவளது அப்பா புதுச்சேரி அரசு துறை ஒன்றில் பெரிய பதவியில் இருப்பதும் கீர்த்தனாவுடன் பேசும் எனது அலுவலகத்தோழிகள் வாயிலாக தெரிந்து கொண்டேன். கம்பெனி செக்ரட்டரி பதவி என்பது சார்ட்டர்ட் அக்கவுண்டட்க்கு சமமானது என்பதையும் கூகுளில் பார்த்துக் கண்டுபிடித்தேன். நான் ஏழுவருஷமா குப்பைக்கொட்டி வாங்கும் சம்பளத்தில் கீர்த்தனா தனது இரண்டுவருட அனுபவத்துடன் இங்கு வந்து சேர்ந்து இருக்கிறாள் என்பதும் தெரிந்தது.

கீர்த்தனாவை நேரில் பார்க்கும்பொழுதெல்லாம் கண்ணோடு கண்ணாகப் பார்க்க ஆரம்பித்தேன். "நான் உன்னை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்" என நான் என் கண்களால் சொல்லுவதாக என் மனதில் நினைத்துக்கொண்டேன். சில சமயங்களில் நான் பார்க்கிறேன் எனத்தெரிந்து அவளும் பார்ப்பாள், அந்தப்பார்வை "இவன் ஏண்டா நம்மை இப்படி பார்க்கிறான்" என்பதாக இருக்கும்.

சுமதியிடம் பேசும்பொழுதெல்லாம் கீர்த்தனாப் பற்றிய பேச்சை வீம்பாக ஆரம்பிப்பேன். நான் வேண்டுமென்றேக் கேட்பதைத் தெரிந்து "என்ன ரூட் விடுறியா? ஏற்கனவே பெங்களூர்ல ரம்யா, இப்போ பாண்டிச்சேரியா?"

"சே சே, அப்படி எல்லாம் இல்லை. லவ்வுக்கும் எத்திக்ஸ் உண்டு, ஒரு சமயத்தில ஒரு டிராக் தான், ஆனால் நிறைய சைட் அடிக்கலாம்..கீர்த்தனா ரிசம்பல்ஸ் ஜெனி"

சுமதி ஜெனியை நேரில் பார்த்து இருக்கிறாள்.

"ம்ம்ம் .. அதுக்காக ?"

"ஜெனி மாதிரி இருக்கிறதுனாலே கொஞ்சம் எக்ஸ்ட்ரா அட்டென்சன் அவ்வளவுதான்,"

"சரி சரி ..ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யுவர் பீலிங்ஸ், உனக்கு கீர்த்தனா பத்தி ஒன்னு சொல்றேன்"

"சொல்லு சொல்லு"

"கீர்த்தனாவுக்கு எப்.எம்ல நைட் பேசுற ஆர்.ஜே கவுதமைப்பிடிக்கும்"

ஏனோதெரியவில்லை எனக்கு காதில் புகைவந்தது போல இருந்தது. பொதுவாக நான் பண்பலையில் ரகசிய சினேகிதிதான் கேட்பதால் கவுதமை தவிர்த்துவிடுவேன். கீர்த்தனாவிற்காக அன்றில் இருந்து சிலதினங்களுக்கு கவுதமின் பண்பலை நிகழ்ச்சியைக் கேட்க ஆரம்பித்தேன்.

அடுத்த சில வாரங்களில் நாங்கள் வானொலி பண்பலை நிறுத்தப்பட்டு , மனதின் பண்பலைவரிசைகள் பாடத்தொடங்கின. காதல் உறுதியாகும் சூழலில், மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் முடிவை நான் எடுத்தேன். 

No comments:

Post a Comment