Sunday, 29 April 2012

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 5


கீர்த்தனா மறுநாளே தன் தந்தையின் அலுவலகத்திற்கு சென்று கணக்கு வழக்குகளை முடிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள். கீர்த்தனா அம்மாவும் சற்றே இயல்பை புரிந்து நடைமுறைக்கு திரும்பி கொண்டிருந்தாள். வீட்டிற்கு சென்ற கார்த்தி தன் வெளிநாடு பயண புறப்பாடுகளை அப்படியே  நிறுத்தி விட்டு அலுவலகத்திற்கு சென்று வேலைகளை கவனிக்கத் தொடங்கினான். மாலை வீட்டை அடைந்த அவனிடம் அவன் தந்தை கொஞ்சம் பேசணும் என்று அழைத்தார். அவன் அம்மா காதல்  விஷயத்தை பற்றி தந்தையிடம் பேசி விட்டாள் போல என்று நினைத்து தயங்கிய படி வந்து அமர்ந்தான்.

“என்ன பா? இன்னும் ஆஃபிஸ் போய்ட்டு வந்துட்டு இருக்க? எப்போ வேலையை விட போற? டிக்கெட் என்னைக்கு புக் பண்ண போற?” என்றார். 

என்ன சொல்வதென்று தெரியாமல் கார்த்தி திருதிருவென முழித்துக் கொண்டு அவன் அம்மாவை பார்க்க அவளோ, இன்னும் நான் பேசலை டா” என்று சைகை செய்தாள்.

அப்பா. நான் US போகலை அப்பா. இதே வேலையை பாக்கலாம்னு இருக்கேன் அப்பா.”

“ஏன் டா? எல்லா ஏற்பாடுகளையும் பண்ணினதுக்கு அப்புறம் இப்பிடி பேசிக்கிட்டு இருக்க? உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு.”

“இல்லை அப்பா. புரிஞ்சுக்கோங்க. இந்த வேலையில இருந்தே என்னால நல்ல நிலைமைக்கு வர முடியும் அப்பா”.

“அப்புறம் எதுக்கு டா US போறேனு முடிவு பண்ணுண. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இப்ப ஏன் போகலைனு சொல்ற? எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்”.

இடையில் குறுக்கிட்டாள் கார்த்தியின் அம்மா.

“கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேளுங்க.”

“என்ன டி பொறுமையா இருக்கிறது. நல்லா பிள்ளை பெத்து வளர்த்திருக்கா பாரு. ஒரு நாளைக்கு ஒரு பேச்சு பேசுறான். அம்மாவும், பிள்ளையும் சேர்ந்து என்னை கோபப்படுத்துறதே வேலையா போச்சு.”

“அது இல்லைங்க. அந்த பொண்ணு கீர்த்தனா இருக்கிறாளா!”.

“அந்த பொண்ணுக்கு என்ன இப்போ. நான் என்ன கேட்ட, நீ என்ன பேசிக்கிட்டு இருக்க?”

“கொஞ்சம் நான் பேசுறதை கேட்டு தான் பதில் சொல்லுங்களேன்”.

“சரி. என்ன சொல்லு”.

“அந்த பொண்ணும், கார்த்தியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க”.

“ஓஹோ!! சார். காதல் வேற பண்ணுறாரா?”

“அந்த பொண்ணும் நல்ல குணமான, அடக்கமான பொண்ணா தான் இருக்காள். அந்த பொண்ணையே நம்ம பையனுக்கு பேசி முடிச்சுடலாங்கா”.

“ஓ!!நீயும் இதுக்கு துணையா? அப்புறம் நான் எதுக்கு இந்த வீட்ல இருக்கேன். எல்லாத்தையும் அம்மாவும், மகனுமே முடிவு பண்ணிட்டீங்க. நடத்துங்க”.

“அப்பிடி இல்லைப்பா. நல்ல பொண்ணு அப்பா. நீங்களும் பேசி பாருங்க. உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும்”.

“ஆமாங்க. சின்ன வயசுல இருந்தே கார்த்தி ஆசை பட்டதெல்லாம் செய்திருக்கோம். கல்யாண விஷயத்துலயும் அவன் இஷ்டப்படி செய்யலாம். அந்த பொண்ணு கூட அவன்  வாழ்க்கை நல்லா இருக்குங்க.”

“அம்மாவும், மகனும் சேர்ந்து ஏதோ பண்ணுங்க. என்னை ஆளை விடுங்க”.

“என்னப்பா. இப்பிடி சொன்னா எப்பிடி.? பேசி முடிவு பண்ணலாம் பா. அப்பாவை இழந்துட்டு நிக்கிற அவளுக்கு நான் ஆறுதலா இருக்கணும்னு ஆசை படுறேன் பா. அதான் US போகலை அப்பா”.

“சரி டா. இது உன் வாழ்க்கை. யோசிச்சு முடிவு பண்ணு. எதை செய்தாலும் உன் இஷ்டபடி செய். உன் சந்தோஷம் தான் எனக்கும் முக்கியம்.”

“ தாங்க்ஸ் அப்பா.”


காதலுக்கு அவன் வீட்டில் பச்சை கொடி காட்டியதை எண்ணி மகிழ்ச்சியில் இருந்தான் கார்த்தி. இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி காலையில் அலுவலக வேலையிலும் மாலையில் கீர்த்திக்கு ஒரு வீடு பார்க்கும் வேலையிலும் மூழ்கினான். 2 நாட்களிலேயே அவன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு அடுக்கு மாடி வீடு ஒன்று கிடைத்தது. வாட்ச்மேனுடன் இருந்ததால்  கீர்த்தியும்
, அவள் அம்மாவும் தங்குவதற்கு சரியான இடம் என்று முடிவு செய்தான். கீர்த்தியும் புதுச்சேரியை விட்டு சென்னை வருவதற்கான வேலையில் மும்முரமாக இருந்தாள். வார இறுதியில் கார்த்தி புதுச்சேரி கிளம்பி சென்றான். கீர்த்தியும் எல்லா வேலைகளையும் முடித்து கிளம்பி கொண்டிருந்தாள். கார்த்தியின் உதவியுடன் கீர்த்தியும், அவள் அம்மாவும் சென்னையில் அவன் பார்த்து வைத்திருந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு குடி பெயர்ந்தனர்.

No comments:

Post a Comment