Wednesday, 1 August 2012

மலடியின் குழந்தை

வானத்தில் மலர்ந்த
மலர் போல
வையத்தில் வீழ்ந்த
நட்சத்திரம் போல
காலையில் உதிக்கும்
நிலவு போல
மாலையில் மிளிரும்
சூரியன் போல
முரண்பாடு ஆனது
குழந்தை மீதான
என் ஆசையும்...
 
காண கொடுத்த
கண்களை
கண்ணீர் சிந்த
பயன்படுத்துவதில்
பயனேதும் இல்லை.
பண்பட்டது நெஞ்சம்.....
 
அமைத்தேன் ஒரு ராஜாங்கம்
அதில் ஆனேன் ராணி..
என் நாட்டில்
எத்தனை எத்தனை
குட்டி இளவரசர்கள்
குட்டி இளவரசிகள்..
காண கண் கோடியும்
கேட்க லட்சம் காதுகளும்
வேண்டினேன் இறைவனை...
 
வேளைக்கு ஒரு குழந்தை
என்னை மகிழ்வித்தது
தாலாட்ட ஒன்று
சோறூட்ட ஒன்று
சமாதானபடுத்த ஒன்று
அரவணைக்க ஒன்று
மழலை மொழியில் பாட ஒன்று
கை கோர்த்து ஆட ஒன்று
பள்ளிக்கு அனுப்ப ஒன்று
பாடம் கற்று கொடுக்க ஒன்று
என்று விதவிதமாய்
மழலைகள் பட்டாளம்
என்னை கொள்ளையிட்டது...
 
பிள்ளையில்லா குறை நீங்கி
பிள்ளைகளுக்கு குறைவில்லா
நிலை வந்தது
என் ராஜாங்கத்தில்...
பூந்தேரில் பவனி வந்தனர்
குட்டி இளவரசர்கள்...
பொன்னூஞ்சலில் ஆடினர்
குட்டி இளவரசிகள்...
இவையெல்லாம் நடந்தது
என் கனவில் அல்ல..
நிஜம் தான்...
கடவுளின் குழந்தைகள் இல்லத்தில்...

நேசத்தின் சுவாசம் - என் சினேகிதி


உன் காதல்
கடிதத்திற்கு
கூட கிடைக்கவில்லை
தனிமை...
நம் நட்பின்
பகிர்தலின் முன்.....

எத்தனை முறை
நீ முகம்
திருப்பி நின்றாலும்
கை கூப்பி
உன்னை வேண்டியிருக்கிறேன்...
எனக்காக அல்ல...
நம் நட்பின்
பிரிதலை
நீ தாங்க மாட்டாய் என்றே!!

எத்தனையோ முறை
நாம் பேசும்
அர்த்தமற்ற வார்த்தைகளை
எல்லாம் நகைச்சுவை
என்று நினைத்து புன்னகைத்திருக்கிறோம்..
புன்னகைக்கு காரணம்
வார்தைகள் அல்ல..
சினேகிதமே.....

தொலை தூர
பயணங்களில் எல்லாம்
சோர்வுற்ற என்னை
சேர வேண்டிய இடம்
சேர்த்தது
சேர்ந்திருந்த உன் கைகளே!!!!!

மழை விழும்
ஒவ்வொரு நாளும்
நினைத்து பார்க்கிறேன்
கல்லூரி நாளில்
ஒரு குடையில்
இருவர் நடக்கும்
நாட்களை...
நட்பில் நனைய
நமக்கு தேவைப்பட்டது
ஒரு குடை

கடற்கரையில்
படகுகளுக்கு இடையில்
ஒளிந்து பேசும்
அவஸ்தை இல்லை
நம் நேசதிற்கு...
அலைகளுடன்
நம் நட்பை
பகிர தடை
ஏதும் இல்லை

விடுமுறை என்றால்
கொண்டாட்டம் தான்
பிறருக்கு...
நட்பை தூர படுத்தும்
கல்லூரி தான்
எதிரி நமக்கு...

தோளில் சாய்ந்த
தோழனை
தோழமைலிருந்து பிரித்து
தோல்வியடையும் காதலாக
தோன்ற வைத்த சினிமாவை
தோற்கடித்தோம் நாம்......

அடித்து பிடித்து
ஒரே தட்டில்
உண்ட உணவிலும்
ஆளுக்கொரு வாய்
ஊட்டிக்கொண்ட உணவிலும்
அல்லவா
அறுசுவையை கண்டோம்....

கடற்கரை மணலில்
நாம் கட்டிய
நட்பு கோட்டையை
தகர்க்க வந்த
அலை கூட
நிதானித்து திரும்பியது
கடலுக்கே!!!

.

மழை கால சலுகைகள்


கதாபாத்திரங்கள்:

கஞ்சன் (ப்ரீ யா கொடுத்த விஷத்தை கூட குடிப்பான்)
மகா கஞ்சன் ( ப்ரீ யா இருந்தா அடுத்தவன் துப்புன விஷத்தையும் குடிப்பான்).

நகைச்சுவை:

இவங்க 2 பேரும் ஒரு மழை காலத்துல சந்திச்சு மழை கால இலவச சலுகைகளை பத்தி பேசுறாங்க.

கஞ்சன்: எங்க வீட்டு தெரு முனையில இருக்குள்ள அந்த மருத்துவமனையில நோயாளி கூட வரவங்களுக்கு இலவசமா ஊசி போடுறாங்கலாம் டா. .

மகா கஞ்சன் : பக்கத்து வீட்டு சின்ன பையன் இன்னைக்கு காலைல தான் தும்முனான். அவன் கூட போய் ஊசி போட்டுக்க வேண்டியது தான்..

கஞ்சன்: அது மட்டும் இல்லை டா. அந்த ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்கே ஒரு மெடிக்கல். அங்க டேப்லெட் வாங்குறவங்களுக்கு ஒரு விக்ஸ் ப்ரீ யா தாரங்கலாம்.

மகா கஞ்சன்: அப்போ அந்த பையனுக்கு மாத்திரையும் அங்க வாங்க வேண்டியது தான். ஒரே கல்லுல 2 மாங்காய். தாங்க்ஸ் மச்சி.

மகா கஞ்சன்: பஜார் ல இருக்கே பெரிய குடை கடை. அங்க ரெயின் கோட் வாங்குறவங்களுக்கு ஒரு குடை இலவசமாம்.

கஞ்சன்: அப்படியா. என் மச்சான் ரெயின் கோட் வாங்கி தர சொல்லி நேத்து தான் பணம் கொடுத்தான். நல்ல வேலை. இந்த விஷயத்தை சொன்ன. இந்நேரம் நான் ஏமாற இருந்தேன்.

சருகு - ஹைக்கூ தொகுப்பு 4


சருகு - நகைச்சுவை

நபர் 1 : யோவ் ... என்னய்யா!!! பந்தியில வாழை இலைக்கு பதிலா சருகை போட்டுருக்கீங்க?

நபர் 2 : நீ ஆடி அசைஞ்சு வரதுக்குள்ள இலை காய்ஞ்சு சருகு ஆயிருச்சு

நபர் 1 : இதுக்கு தான் தண்ணி தெளிச்சு வைக்கணும்றது....


பின் குறிப்பு: தமிழ் தோட்டம் தள போட்டியில் முதலிடம் பெற்ற நகைச்சுவை 

சருகு

சேவுகன் அந்தியூர் கிராமத்தின் அரசமரம் பிள்ளையார் கோவிலின் பூசாரி. அவனது ஒரே மகன் கணேசன்... தலை பிரசவத்திலேயே தன் மனைவியை பறிகொடுத்தவன். அதன் பின் அரசமரத்து கணேசனும், மகன் கணேசனும் மட்டுமே இவன் வாழ்க்கை என்று ஆனது... தன் மகனை அம்மா இல்லாத குறை தெரியாமல் வளர்க்க பெரும்பாடு பட்டான். அவனும் சுட்டி தனம் மிக்கவனாகவே வளர்ந்தான். மகனுக்கு படிப்பின் மேல் பெரிதாக ஆர்வம் இல்லை என தெரிந்து மகனை கோவிலின் பராமரிப்புகளில் ஈடுபடுத்த எண்ணினான்..

வழக்கமாகவே சேவுகன் தான் கோவிலின் அனைத்து வேலைகளையும் கவனித்து கொள்வான். மரத்தடி பிள்ளையார் என்பதால் சருகுகள் கொட்டிக் கொண்டே இருக்கும். அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருப்பான். சின்ன கோவில் தான் என்றாலும் பக்தர்கள் கூட்டம் காலையிலும் மாலையிலும் இருந்த வண்ணமே இருக்கும். கோவிலின் அருகிலே வீடு என்பதால் அவனுக்கு வசதியாகவே இருந்தது. 

ஒரு நாள் தன் மகனை அழைத்து தனக்கு பின் கோவிலை கவனித்து கொள்ளும் பொறுப்பை செவ்வனே செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி கொண்டு இருந்தான். அப்பொழுதும் விளையாட்டு புத்தியுடன் தலையை மட்டும் ஆட்டி கொண்டு அருகில் இருக்கும் மந்தையில் விளையாடி கொண்டு இருந்த பையன்களையே பார்த்துக் கொண்டிருந்தான். 

அன்று முதல் கோவிலை பெருக்கி சுத்தம் செய்யும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தார். ஒரு நாள் செய்வான். மறுநாள் ஏதாவது ஒரு காரணம் தேடி தந்தையிடமே ஒப்படைத்து விடுவான். இப்படியே நாட்கள் நகர்ந்தது. சேவுகனும் நாள் ஆக நாளாக பொறுப்பு வந்துவிடும் என்று எண்ணி மனதை தேற்றி கொள்வான். ஒரு நாள் தீடீரென மாரடைப்பு ஏற்பட்டு சேவுகன் இறந்து விட கோவிலின் முழு பொறுப்பும் கணேசனிடம் வந்தது.

தந்தையின் கடைசி ஆசைப்படி கோவிலை நன்கு கவனித்து கொண்டு இருந்தான். ஒரு மாதம் கடந்தது. அவனுக்குள் ஏதோ சலிப்பு தட்ட ஆரம்பித்தது. தனக்குள் முடங்கி கிடந்த விளையாட்டு தனம் தலை தூக்க ஆரம்பிக்க கோவிலை கவனிக்க முடியாமல் விளையாட செல்ல ஆரம்பித்தான். காலையில் அரை குறையுமாக பெருக்கி செல்ல கோவிலில் சருகு நிறைந்து இருந்தது. 

அன்று கோவிலுக்கு கிராமத்தின் நாட்டாமை வர கோவிலின் நிலைமையை கவனித்து கணேசனுக்கு அன்றைய தினம் நல்ல அர்ச்சனை செய்தார். மனம் உடைந்த போன அவன் அன்று இரவு உறங்க போகும் முன் கடவுளிடம் சென்று “உன்னை நானும் என் தந்தையும் கவனித்து கொண்டதற்கு பரிகாரமாக நாட்டமையிடம் என்னை இப்படி என்னை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறாயே? உண்மையிலே உன் பக்தர்கள் மீது உனக்கு அக்கறை இருக்கிறதா? நான் என்ன செய்வேன். எல்லாம் இந்த சருகினால் வந்த வினை. எத்தனை முறை பெருக்கினாலும் சருகு கொட்டி கொண்டு தானே இருக்கிறது. இதற்கு தீர்வே கிடையாத?” என்று புலம்பி பார்த்தான். “ஏன் பேசாம இருக்க? ஏதாச்சும் பதில் பேசு ?” என்று கடவுளை திட்ட ஆரம்பித்தான்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளையார் அவன் முன் தோன்றி “மகனே !! என்ன உன் பிரச்சனை ? என்று கேட்க, அவனும் “இவ்வளோ நேரம் கதையா கேட்டு கிட்டு இருந்த சாமி. நான் பொலம்புறது உனக்கு வேடிக்கையா இருக்கா” என அலுத்துக் கொண்டு “ இந்த சருகு கொட்டிக்கிட்டே இருக்க கூடாது. இதான் என் பிரச்சனை என்று கூற “சரி மகனே அப்படியே ஆகட்டும். காலையில் நீ எழுந்து பார்க்கும் போது உன் பிரச்சனை தீர்ந்து இருக்கும்” என்று கூறி மறைந்தார். 

நிம்மதியுடன் உறங்கி போனான் கணேசன். அதிகாலை வழக்கம் போல எழுந்து கோவிலை பெருக்க துடைப்பத்துடன் வெளியில் சென்றவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். கோவிலின் மரமே வீழ்ந்து கிடந்தது. மரமே வீழ்ந்து போனதால் பிள்ளையார் சிலையையும் அந்த கிராமத்தின் பெரிய கோவிலுக்கு மாற்றி விட்டனர். கணேசனுக்கு இருந்த கோவில் வேலையும் பறிபோனது. வந்த வருமானமும் நின்று போனது. நம் வேலையை சரி வர செய்யாமல் கடவுளை பழிக்க கூடாது. செய்யும் தொழிலே தெய்வம். சோம்பல் தான் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை என்பதை புரிந்து கொண்டு வேலை தேட ஆரம்பித்தான் கணேசன். 


பின் குறிப்பு : தமிழ் தோட்டம் தள மாதாந்திர போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த கதை .....