Friday, 8 June 2012

பூ - உரையாடல்

கதாபாத்திரங்கள்: மல்லிகை, ரோஜா, துளசி, கனகாம்பரம், முல்லை, பிச்சி, உலக அழகி.

உரையாடல் கரு: தங்களுக்குள் சிறந்தவர், அழகானவர், உயர்ந்தவர் யார் என்ற போட்டி ஏற்படுகிறது.

ரோஜா: ஊட்டியோட ராணி நான் தான். எனக்கு எத்தனை வண்ணம் தெரியுமா? என்னை பார்க்கிறதுக்காகவே எத்தனை பேர் ஊட்டி வராங்க தெரியுமா? மலர் கண்காட்சியில எனக்கு எப்பவுமே தனி இடம் தான். எத்தனை வாசனை திரவியங்கள் என்னால் உண்டானது தெரியுமா? இத்தனை சிறப்பையும் பெற்ற நானே சிறந்தவள்!.

மல்லிகை: ஊட்டியோட உன் ஆட்டம் எல்லாம் முடிந்தது. கோவில் மாநகரம் மதுரை மாநகரத்தின் இளவரசி நான். நான் இல்லாத ஒரு கல்யாணம், காதுகுத்து, வளைக்காப்பாவது உண்டா!!! என்னால் உண்டான வாசனை திரவியங்களே மிகுந்த மணம் உடையது.

கனகாம்பரம்: வெள்ளை நிறமான நீ என்ன அவ்வளவு அழகா? என்னையும் உன்கூட சேர்த்து வைக்கிறதால தான் நீ கொஞ்சமாவது அழகா இருக்க!!! மத்தபடி கல்யாணமோ, காதுக்குத்தோ எனக்கு தான் முதலிடம்.

பிச்சி: இவங்க எல்லாம் அழகை பேச வந்துட்டாங்கப்பா. வெள்ளை நிற பூக்களிலேயே நான் தனியான இடத்தை பிடிச்சுருக்கேன். மலர்ந்ததும் நான் கொடுக்கிற வாசனையோ வாசனை தான். இந்த கழுதைகளுக்கெல்லாம் எங்க என் வாசனை தெரிய போகுது?

முல்லை: இந்த பொண்ணுங்க எல்லாம் உடம்பை கட்டுக்கோப்பா வைக்க எவ்வளவு சிரம படுறாங்க!! ஆனால் எனக்கு அந்த கஷ்டமே இல்லை. இயற்கையிலே நான் அப்படி தான். நான் இதை சொல்லியே ஆகணும். நான் அவ்வளோ அழகு. யாரும் இங்க என்னை விட அழகான பூவை பார்த்திருக்க மாட்டாங்க!!!

துளசி: இவங்க எல்லாம் ஏன் இப்படி சண்டை போட்டுகிறாங்க? என்னை தானே கோவில்ல சாமிக்கு மாலையா போட்டு பிரசாதமா கொடுக்கிறாங்க. வீட்டுல துளசி மாடம் வைத்து என்னை தானே வழிபடுறாங்க!!! அப்பவே தெரிய வேணாம்!! நான் தான் சிறந்தவள்.

ரோஜா: என்னை கூட தான் சாமிக்கு மாலையா போடுறாங்க.
மல்லிகை உட்பட பிற பூக்கள்: எங்களையும் தான் சாமிக்கு சமர்ப்பிக்கிறாங்க.

ரோஜா: சரி. சரி. நமக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வரமுடியாது. இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு சிறந்த
நடுவர் வேணும்.

மல்லிகை: ரோஜா சொல்றது சரி தான். நம்மை எல்லாம் உபயோகப்படுத்தி அழகுப்படுத்திக்கிறது பெண்கள் தான். அதனால உலகத்திலே சிறந்த அழகிக்கிட்ட போய் யார் சிறந்தவர்கள்னு முடிவு பண்ணுவோம்.

பிற பூக்கள்: சரி வாங்க. போகலாம்!!!

உலக அழகி: என்ன எல்லா பூவும் ஒன்றாக சேர்ந்து வந்துருக்கீங்க?

துளசி: எங்களுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்.

உலக அழகி: அப்படி என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?

ரோஜா: யார் சிறந்தவள் என்ற போட்டி எங்களுக்குள்ள? முடிவை தெரிஞ்சுக்க தான் உங்கக்கிட்ட வந்தோம்.

உலக அழகி: [(மனக்குரல்) என்ன சொல்றது. எல்லா பூவுமே அழகு தான். இருந்தாலும்.... நாம தானா சிறந்தவள்]

துளசி: என்ன யோசிக்கிறீங்க. பதில் சொல்லுங்க...

உலக அழகி: ஓ. சொல்லுறேன். உங்க எல்லோரையும் அணிந்து கொள்கிற தகுதியும், திறமையும் உள்ள நான் தான் சிறந்தவள்.

மலர்கள் அனைத்தும் ஏமாற்றத்துடன் தோட்டம் திரும்பின.

பிச்சி: இதுக்கு தான் நாம மனிதர்களிடத்தில் நியாயம் எதிர்பார்க்கக் கூடாது.

முல்லை: நம்மை பயன்படுத்தி அழகுப் படுத்தி கொள்கிற அவளுக்கே அவ்வளவு கர்வமா? அப்போ நமக்கு எவ்வளவு இருக்கும்?

ரோஜா: உலக அழகி, பிரபஞ்ச அழகி, இந்திய அழகி, மாநில அழகி, உள்ளூர் அழகினு போட்டி அதிகமா இருக்கிற காலத்தில நாம வேற போட்டிக்கு வரோம்னு தெரிஞ்சா இந்த பொண்ணுங்க சும்மா இருக்க மாட்டாங்க.

மல்லிகை: நமக்குள்ள போட்டி,, பொறாமை எதற்கு? இயற்கையோட படைப்பில் நாம எல்லோருமே ஒவ்வொரு வகையில் அழகானவர்கள், மணமானவர்கள், சிறந்தவர்கள் தான்.

பிற மலர்கள்: நாட்டாமை!!! தீர்ப்பை மாத்திடாத!!!

கல்லூரி காதல் (பூ)


கல்லூரி சாலையில்
உன்னை கடந்த போது
உன் ஸ்பரிசம்
என் கவனத்தை ஈர்த்தது...

அன்று முதல்
ஒவ்வொரு நாளும்
உன் அழகை
ரசிக்க தவறியதில்லை...

நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
உன் வளர்ச்சி கண்டு
ஏங்குவோர் பலர்....

உன் இதழ்களின் அசைவினில்
காதலை உணரும் வேளையில்
இதழ்களை மூடிக் கொண்டாய்..
இது என்ன இன்ப விளையாட்டு?

உன் இதழ்கள் மீது
அமர்ந்திருந்த தேனீக்களிடம்
எனக்கு வந்தது
பொல்லாத கோபம்…

கோபம் பொறாமையாக மாறி
சூழ்ச்சியும் செய்து
அந்த வித்தையை
கற்றேன் தேனீயிடம்

இன்று உன் இதழ் மீது
தேனீக்கள் இல்லை..
இடமாற்றம் செய்து
என் இதழ் வந்தது...

கல்லூரி வந்து செல்லும்
நேரம் போதவில்லை எனக்கு
எப்போதும் உன்னுடன்
இருக்கும் வரம் வேண்டினேன்...

வீட்டிற்கு உன்னை அழைத்து
செல்ல திட்டமிட்டேன்...
பெற்றோர்கள் தான் வல்லவர்களாயிற்றே
காதலை பிரிப்பதில்!!!

என் பெற்றோர் மட்டும்
விதி விலக்கா என்ன!!
உன்னை வளர்ப்பதே போதும்
உனக்காக இது வேறா என்றார்கள்!!!

ஏதும் ஏறவில்லை மண்டையில்
பெற்றோரிடம் சண்டையிட்டேன்
என் காதலுக்காக
இன்று நீ என் இல்லத்தில்!!!

தினமும் கண் விழிப்பதே
உன் முகத்தில் தானே!!
எத்தனை பேருக்கு
இந்த பாக்கியம் கிட்டும்!!!

உன் மீதான காதலை
யாராலும் பிரிக்க முடியாது
என்றென்றும் வாழ்வேன்
உன்னுடன் இன்பமாக!!!

குறிப்பு : மே மாதம் தமிழ் தோட்டம் தளத்தில்  பூ என்ற தலைப்பில் நடைபெற்ற    கவிதை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த என் கவிதை ...
Friday, 1 June 2012

காலத்திற்கு ஏற்ற மாற்றம்

பிச்சைக்காரன்: ஐயா பிச்சை போடுங்கய்யா.  

வீட்டுக்காரர்: வந்திருவீங்களே. திருவோட எடுத்துக்கிட்டு!!!. காலம் மாறினாலும் நீங்க மாற மாட்டீங்களா?

பிச்சைக்காரன்: சரி. இந்தாங்கய்ய..

வீட்டுக்காரர்: என்ன? என்ன நம்பர் இது?

பிச்ச்சைக்காரர்: என் பேங்க் அக்கவுண்ட் நம்பர். ஆன்லைன் ட்ரான்ஸ்சாக்சன் பண்ணிடுங்க..    

வீட்டுக்காரர்: ????  

பூக்கள் பேசினால்

தமிழ் தோட்டம் தளத்தில் நடைபெற்ற நகைச்சுவை போட்டியில் முதல்
பரிசை பெற்ற என் நகைச்சுவை


சில நேரத்துல நாம பூவுக்கு வாய் இருந்தா அழுதுரும்னு சொல்லுவோம்ல. அது மாதிரி பூவுக்கு வாய் இருந்திருந்தா என்ன எல்லாம் பேசியிருக்கும்னு சின்னதா ஒரு கற்பனை

1. வீட்டில் வளர்க்கப்பட்ட பூச்செடிக்கு சில நாட்களாக தண்ணீர் ஊற்றவில்லை.
பூ: பக்கி!! அது மட்டும் ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸா அடைக்குது. எனக்கு பச்சை தண்ணியை கூட கண்ணுல காட்டமாட்டிக்குது. 

2. ஒருவன் முதன் முதலாக காதலை சொல்ல ரோஜா கொடுத்தான். அவன் காதலியோ அதை தூக்கி எறிந்தாள்.
பூ: உங்க சண்டைல என்னை ஏன் டி தூக்கி எறிஞ்ச?

3.பூங்காவில் காதலிக்காக காத்திருக்கும் காதலன் பூக்களை ஒவ்வொரு இதழாக பிரித்து போட்டுக் கொண்டிருக்கின்றான்.
பூ: ஏன் டா? உன் காதலி வரலைனா என்னை இப்பிடியா கொடுமைப்படுத்துவ?

4. போட்டியில் வெற்றி பெற்ற ஒருவன் தனக்கு போட்ட மாலையை கழட்டாமல் வீடு செல்கிறான்.
பூ: ஒத்துகிறேன். நீ ஜெயிச்சு ஜெயிச்சு மாலை வாங்கிட்டனு.

5. திருமணத்தில் மணப்பெண் பூக்களின் எடை தாங்காமல் அலுத்துக் கொள்கிறாள்.
பூ: என்னோட ஒரு தோட்டத்தையே அழிச்சு தலையில வச்சுக்கிட்டதுக்கு நான் தான் அலுத்துக்கணும்.

6. புதிதாக திருமணமானவன் தன் மனைவிக்கு பூ வாங்கிக் கொண்டு செல்கிறான். 
பூ: அதான் அது அதுக்கு ஆள் வேணும்றது. இத்தனை நாள் என்னை திரும்பி பார்த்திருப்பியா?

7. மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் பூ
பூ: என்னை ஏன் டா இப்பிடி குறுகுறுகுறுனு பாக்கிறீங்க? எனக்கு வெட்கமா இருக்கு.

8.நோயாளிக்கு கொடுக்கும் பூங்கொத்து. 
பூ: அவனே உடம்புக்கு முடியாம இருக்கான். ஆப்பிளோ, ஆரஞ்சோ வாங்கி கொடுத்தா ஜூஸ் போட்டுக் குடிப்பான். என்னை ஏன் டா கொடுக்கிறீங்க?

9. இறந்த வீட்டில் பிணத்தின் கழுத்தில் இருக்கும் மாலை
பூ: நீங்க எல்லாம் நாறாம இருக்க என்னை ஏன் டா இப்பிடி நாறடிக்கிறீங்க?

10. கடவுளுக்கு சமர்ப்பிக்கப்படும் மாலை
பூ: அப்பாடா!! எனக்கு சொர்க்கம் தான்.

பூவாகிய நான்


ஒரு பூ எழுதும் கவிதை