Sunday 29 April 2012

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 3


கீர்த்தனாவின் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் வீடே நிலை குழைந்து இருந்தது. வீட்டில் யாரும் உண்ணாமல் உறங்காமல் விடிய விடிய கவலையில் ஆழ்ந்து இருந்தனர். மறுநாள் கீர்த்தனா மெல்ல மனதை தேற்றிக் கொண்டு அப்பாவிற்கும், அம்மாவிற்கும் காஃபி எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்குச் சென்றாள். அம்மாவின் முகத்தை பார்த்த உடனே தெரிந்தது அவளுக்கு. இரவு முழுதும் தூங்காமல் அழுதுக் கொண்டே இருந்திருக்கிறாள் என்பது. அவள் அப்பா அறையின் பால்கனியில் இருந்த ஊஞ்சலில் ஏதோ சிந்தனையாக அமர்ந்து கொண்டு இருந்தார். உடம்பு முழுதும் படபடத்து இருந்தது.

அம்மாவிடம் காஃபி குடிக்கும் படி கூற அவள் ஏதும் பேசாமல் அழுதுக் கொண்டே இருந்தாள். கீர்த்தனாவால் அவள் அம்மாவை சமாதானம் செய்யவே முடியவில்லை. அவள் அப்பாவின் அருகில் சென்று நீங்களே இப்பிடி மனம் தளறினால் எப்பிடி அப்பா. அம்மாவை பாருங்கப்பா. அழுது கிட்டே இருக்காங்க. நீங்க போய் சமாதான படுத்துங்க. எல்லாம் சரி ஆயிரும் அப்பா” என்று கூறிக் கொண்டிருக்கையில் நெஞ்சு வலியில் துடிக்க கீர்த்தனா என்ன செய்வது என்று அறியாமல் “ அப்பா அப்பா என்ன ஆச்சு?” என்று அலற, அவள் அம்மா படுக்கையில் இருந்து பதறி எழுந்து வந்தாள். “அப்பாவை பாத்துக்க அம்மா. ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணிட்டு வர்றேன் என்று விரைந்தாள். சில நிமிடங்களிலே ஆம்புலன்ஸ் வர மூவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட கீர்த்தனாவும், அவள் அம்மாவும் கலக்கத்துடனும், கண்ணீருடனும் வெளியில் காத்திருந்தனர்.

உடனடியாக பணம் கட்ட சொல்லி மருத்துவமனையில் கூற, கீர்த்தனாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கார்த்தியின் நினைவு வர அவனுக்கு கால் செய்தாள். நிலைமையின் விவரம் அறியாத அவனோ “என்ன மேடம். வீட்டுக்கு போனதும் என் ஞாபகமே வரலையோ. ஒரு நாள் ஃபுல்லா கால், மெசேஜ் எதுவும் இல்லை” என்று அவளை பேச விடாமல் பேசிக் கொண்டிருந்தான். பின்னரே அவளின் அழும் குரல் கேட்டு தன் கிண்டல் பேச்சை நிறுத்தி, “என்ன ஆச்சு கீர்த்தி? எனி ப்ராப்ளம்?” என்றான். அவளோ அழுதுக் கொண்டே “அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். அவசரமா பணம் தேவை படுது. நீ பணம் எடுத்துக்கிட்டு உடனே கிளம்பி வாரியா?” என்று கேட்க “உடனே வர்றேன். நீ ஒண்ணும் கவலை படாத. தைரியமா இரு. அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது. “ என்று இணைப்பை துண்டித்து அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பினான்.
மருத்துவமனையை அடைந்த அவன் நேராக சென்று பணத்தை கட்டி  விட்டு கீர்த்தியிடம் சென்றான். கண்களில் கண்ணீருடனும், படபடப்புடனும் இருந்த காதலியை பார்த்த கார்த்தி பதைபதைத்தான். கீர்த்தியிடம் சென்று ஆறுதல் கூறினான். என்ன கூறினாலும் அவளை தேற்ற முடியவில்லை.

“நேசம் மிகும் நேரத்தில்
நெஞ்சம் கொடுப்பதல்ல நம் காதல்
துயரம் மிகும் நேரத்தில்
தோள் கொடுப்பதுவே நம் காதல்”.

கார்த்திக்கு என்ன நடந்ததென்று கேட்க தோன்றினாலும் அவள் இருந்த நிலையை பார்த்து ஏதும் பேசாமல் நின்றான். மதியதிற்கு மேல் தேநீர் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். கீர்த்தியும், அவள் அம்மாவும் அருந்த மறுத்தனர். சமாதானப்படுத்தி அருந்த வைத்தான் கார்த்தி. மாலை வரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கீர்த்தியின் தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்தது. என்ன முயற்சித்தும் மருத்துவரால் அவரை காப்பாற்ற இயலவில்லை. மாலை 6.30 மணிக்கு அவரின் உயிர் பிரிய சொல்ல முடியாத துயரில் ஆழ்ந்தனர் கீர்த்தியும் அவள் அம்மாவும். கார்த்தியின் உதவியுடன் அவரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். நெருக்கமான சில உறவுகளின் அலைபேசி எண்களை கீர்த்தியிடம் வாங்கி, தகவலை தெரிவித்தான்.

உறவினர்கள் ஒவ்வொருவராய் வந்து சென்றனர். மிக நெருங்கிய சில உறவுகள் மட்டுமே தங்கி இருந்தனர். கார்த்தி தன் அப்பா,அம்மாவிடமும் தகவல் தெரிவித்து வரவழைத்தான்/ இறுதி சடங்குகளுக்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் முன் நின்று கவனித்து கொண்டான். எல்லா உறவுகளும் வந்து சேர அவரின் உடலை மாலை மரியாதையுடன் எடுத்து செல்ல தயார் ஆனார்கள். மகன் செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை செய்ய உறவினர்கள் அனைவரும் தயங்க, கீர்த்திக்கும் அவள் அம்மாவுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. கீர்த்தியின் பார்வை கார்த்தியிடம் திரும்ப, அதையும் கார்த்தியே செய்து முடித்தான்.


எல்லா சடங்குகளும் முடிந்து
, வந்த உறவினர் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர். கீர்த்தியும் அவள் தாயும் அன்னம், தண்ணீர் இல்லாமல் அழுதழுது கண்களில் நீரே வற்றி விட்டது. இவர்களை இப்படி தனிமையில் விட்டு ஊருக்கு கிளம்ப மனம் இல்லாமல் கார்த்தியும், அவன் அம்மாவும் அங்கேயே தங்கி விட்டனர். பக்குவமாக எடுத்துக் கூறி மனதை மாற்ற முயற்சித்தான்.என்ன கூறியும் ஆறுதல் அடைய வில்லை. கார்த்தியின் அம்மா சமையல் செய்து இருவரையும் கட்டாயப்படுத்தி சிறிது உண்ண வைத்தனர். 2,3 தினங்கள் சென்று கீர்த்தி சற்று ஆறுதல் ஆகி மனம் விட்டு பேச விரும்பினாள்.

No comments:

Post a Comment