Wednesday, 1 August 2012

சருகு

சேவுகன் அந்தியூர் கிராமத்தின் அரசமரம் பிள்ளையார் கோவிலின் பூசாரி. அவனது ஒரே மகன் கணேசன்... தலை பிரசவத்திலேயே தன் மனைவியை பறிகொடுத்தவன். அதன் பின் அரசமரத்து கணேசனும், மகன் கணேசனும் மட்டுமே இவன் வாழ்க்கை என்று ஆனது... தன் மகனை அம்மா இல்லாத குறை தெரியாமல் வளர்க்க பெரும்பாடு பட்டான். அவனும் சுட்டி தனம் மிக்கவனாகவே வளர்ந்தான். மகனுக்கு படிப்பின் மேல் பெரிதாக ஆர்வம் இல்லை என தெரிந்து மகனை கோவிலின் பராமரிப்புகளில் ஈடுபடுத்த எண்ணினான்..

வழக்கமாகவே சேவுகன் தான் கோவிலின் அனைத்து வேலைகளையும் கவனித்து கொள்வான். மரத்தடி பிள்ளையார் என்பதால் சருகுகள் கொட்டிக் கொண்டே இருக்கும். அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருப்பான். சின்ன கோவில் தான் என்றாலும் பக்தர்கள் கூட்டம் காலையிலும் மாலையிலும் இருந்த வண்ணமே இருக்கும். கோவிலின் அருகிலே வீடு என்பதால் அவனுக்கு வசதியாகவே இருந்தது. 

ஒரு நாள் தன் மகனை அழைத்து தனக்கு பின் கோவிலை கவனித்து கொள்ளும் பொறுப்பை செவ்வனே செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி கொண்டு இருந்தான். அப்பொழுதும் விளையாட்டு புத்தியுடன் தலையை மட்டும் ஆட்டி கொண்டு அருகில் இருக்கும் மந்தையில் விளையாடி கொண்டு இருந்த பையன்களையே பார்த்துக் கொண்டிருந்தான். 

அன்று முதல் கோவிலை பெருக்கி சுத்தம் செய்யும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தார். ஒரு நாள் செய்வான். மறுநாள் ஏதாவது ஒரு காரணம் தேடி தந்தையிடமே ஒப்படைத்து விடுவான். இப்படியே நாட்கள் நகர்ந்தது. சேவுகனும் நாள் ஆக நாளாக பொறுப்பு வந்துவிடும் என்று எண்ணி மனதை தேற்றி கொள்வான். ஒரு நாள் தீடீரென மாரடைப்பு ஏற்பட்டு சேவுகன் இறந்து விட கோவிலின் முழு பொறுப்பும் கணேசனிடம் வந்தது.

தந்தையின் கடைசி ஆசைப்படி கோவிலை நன்கு கவனித்து கொண்டு இருந்தான். ஒரு மாதம் கடந்தது. அவனுக்குள் ஏதோ சலிப்பு தட்ட ஆரம்பித்தது. தனக்குள் முடங்கி கிடந்த விளையாட்டு தனம் தலை தூக்க ஆரம்பிக்க கோவிலை கவனிக்க முடியாமல் விளையாட செல்ல ஆரம்பித்தான். காலையில் அரை குறையுமாக பெருக்கி செல்ல கோவிலில் சருகு நிறைந்து இருந்தது. 

அன்று கோவிலுக்கு கிராமத்தின் நாட்டாமை வர கோவிலின் நிலைமையை கவனித்து கணேசனுக்கு அன்றைய தினம் நல்ல அர்ச்சனை செய்தார். மனம் உடைந்த போன அவன் அன்று இரவு உறங்க போகும் முன் கடவுளிடம் சென்று “உன்னை நானும் என் தந்தையும் கவனித்து கொண்டதற்கு பரிகாரமாக நாட்டமையிடம் என்னை இப்படி என்னை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறாயே? உண்மையிலே உன் பக்தர்கள் மீது உனக்கு அக்கறை இருக்கிறதா? நான் என்ன செய்வேன். எல்லாம் இந்த சருகினால் வந்த வினை. எத்தனை முறை பெருக்கினாலும் சருகு கொட்டி கொண்டு தானே இருக்கிறது. இதற்கு தீர்வே கிடையாத?” என்று புலம்பி பார்த்தான். “ஏன் பேசாம இருக்க? ஏதாச்சும் பதில் பேசு ?” என்று கடவுளை திட்ட ஆரம்பித்தான்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளையார் அவன் முன் தோன்றி “மகனே !! என்ன உன் பிரச்சனை ? என்று கேட்க, அவனும் “இவ்வளோ நேரம் கதையா கேட்டு கிட்டு இருந்த சாமி. நான் பொலம்புறது உனக்கு வேடிக்கையா இருக்கா” என அலுத்துக் கொண்டு “ இந்த சருகு கொட்டிக்கிட்டே இருக்க கூடாது. இதான் என் பிரச்சனை என்று கூற “சரி மகனே அப்படியே ஆகட்டும். காலையில் நீ எழுந்து பார்க்கும் போது உன் பிரச்சனை தீர்ந்து இருக்கும்” என்று கூறி மறைந்தார். 

நிம்மதியுடன் உறங்கி போனான் கணேசன். அதிகாலை வழக்கம் போல எழுந்து கோவிலை பெருக்க துடைப்பத்துடன் வெளியில் சென்றவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். கோவிலின் மரமே வீழ்ந்து கிடந்தது. மரமே வீழ்ந்து போனதால் பிள்ளையார் சிலையையும் அந்த கிராமத்தின் பெரிய கோவிலுக்கு மாற்றி விட்டனர். கணேசனுக்கு இருந்த கோவில் வேலையும் பறிபோனது. வந்த வருமானமும் நின்று போனது. நம் வேலையை சரி வர செய்யாமல் கடவுளை பழிக்க கூடாது. செய்யும் தொழிலே தெய்வம். சோம்பல் தான் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை என்பதை புரிந்து கொண்டு வேலை தேட ஆரம்பித்தான் கணேசன். 


பின் குறிப்பு : தமிழ் தோட்டம் தள மாதாந்திர போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த கதை .....


No comments:

Post a Comment