Friday 8 June 2012

பூ - உரையாடல்

கதாபாத்திரங்கள்: மல்லிகை, ரோஜா, துளசி, கனகாம்பரம், முல்லை, பிச்சி, உலக அழகி.

உரையாடல் கரு: தங்களுக்குள் சிறந்தவர், அழகானவர், உயர்ந்தவர் யார் என்ற போட்டி ஏற்படுகிறது.

ரோஜா: ஊட்டியோட ராணி நான் தான். எனக்கு எத்தனை வண்ணம் தெரியுமா? என்னை பார்க்கிறதுக்காகவே எத்தனை பேர் ஊட்டி வராங்க தெரியுமா? மலர் கண்காட்சியில எனக்கு எப்பவுமே தனி இடம் தான். எத்தனை வாசனை திரவியங்கள் என்னால் உண்டானது தெரியுமா? இத்தனை சிறப்பையும் பெற்ற நானே சிறந்தவள்!.

மல்லிகை: ஊட்டியோட உன் ஆட்டம் எல்லாம் முடிந்தது. கோவில் மாநகரம் மதுரை மாநகரத்தின் இளவரசி நான். நான் இல்லாத ஒரு கல்யாணம், காதுகுத்து, வளைக்காப்பாவது உண்டா!!! என்னால் உண்டான வாசனை திரவியங்களே மிகுந்த மணம் உடையது.

கனகாம்பரம்: வெள்ளை நிறமான நீ என்ன அவ்வளவு அழகா? என்னையும் உன்கூட சேர்த்து வைக்கிறதால தான் நீ கொஞ்சமாவது அழகா இருக்க!!! மத்தபடி கல்யாணமோ, காதுக்குத்தோ எனக்கு தான் முதலிடம்.

பிச்சி: இவங்க எல்லாம் அழகை பேச வந்துட்டாங்கப்பா. வெள்ளை நிற பூக்களிலேயே நான் தனியான இடத்தை பிடிச்சுருக்கேன். மலர்ந்ததும் நான் கொடுக்கிற வாசனையோ வாசனை தான். இந்த கழுதைகளுக்கெல்லாம் எங்க என் வாசனை தெரிய போகுது?

முல்லை: இந்த பொண்ணுங்க எல்லாம் உடம்பை கட்டுக்கோப்பா வைக்க எவ்வளவு சிரம படுறாங்க!! ஆனால் எனக்கு அந்த கஷ்டமே இல்லை. இயற்கையிலே நான் அப்படி தான். நான் இதை சொல்லியே ஆகணும். நான் அவ்வளோ அழகு. யாரும் இங்க என்னை விட அழகான பூவை பார்த்திருக்க மாட்டாங்க!!!

துளசி: இவங்க எல்லாம் ஏன் இப்படி சண்டை போட்டுகிறாங்க? என்னை தானே கோவில்ல சாமிக்கு மாலையா போட்டு பிரசாதமா கொடுக்கிறாங்க. வீட்டுல துளசி மாடம் வைத்து என்னை தானே வழிபடுறாங்க!!! அப்பவே தெரிய வேணாம்!! நான் தான் சிறந்தவள்.

ரோஜா: என்னை கூட தான் சாமிக்கு மாலையா போடுறாங்க.
மல்லிகை உட்பட பிற பூக்கள்: எங்களையும் தான் சாமிக்கு சமர்ப்பிக்கிறாங்க.

ரோஜா: சரி. சரி. நமக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வரமுடியாது. இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு சிறந்த
நடுவர் வேணும்.

மல்லிகை: ரோஜா சொல்றது சரி தான். நம்மை எல்லாம் உபயோகப்படுத்தி அழகுப்படுத்திக்கிறது பெண்கள் தான். அதனால உலகத்திலே சிறந்த அழகிக்கிட்ட போய் யார் சிறந்தவர்கள்னு முடிவு பண்ணுவோம்.

பிற பூக்கள்: சரி வாங்க. போகலாம்!!!

உலக அழகி: என்ன எல்லா பூவும் ஒன்றாக சேர்ந்து வந்துருக்கீங்க?

துளசி: எங்களுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்.

உலக அழகி: அப்படி என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?

ரோஜா: யார் சிறந்தவள் என்ற போட்டி எங்களுக்குள்ள? முடிவை தெரிஞ்சுக்க தான் உங்கக்கிட்ட வந்தோம்.

உலக அழகி: [(மனக்குரல்) என்ன சொல்றது. எல்லா பூவுமே அழகு தான். இருந்தாலும்.... நாம தானா சிறந்தவள்]

துளசி: என்ன யோசிக்கிறீங்க. பதில் சொல்லுங்க...

உலக அழகி: ஓ. சொல்லுறேன். உங்க எல்லோரையும் அணிந்து கொள்கிற தகுதியும், திறமையும் உள்ள நான் தான் சிறந்தவள்.

மலர்கள் அனைத்தும் ஏமாற்றத்துடன் தோட்டம் திரும்பின.

பிச்சி: இதுக்கு தான் நாம மனிதர்களிடத்தில் நியாயம் எதிர்பார்க்கக் கூடாது.

முல்லை: நம்மை பயன்படுத்தி அழகுப் படுத்தி கொள்கிற அவளுக்கே அவ்வளவு கர்வமா? அப்போ நமக்கு எவ்வளவு இருக்கும்?

ரோஜா: உலக அழகி, பிரபஞ்ச அழகி, இந்திய அழகி, மாநில அழகி, உள்ளூர் அழகினு போட்டி அதிகமா இருக்கிற காலத்தில நாம வேற போட்டிக்கு வரோம்னு தெரிஞ்சா இந்த பொண்ணுங்க சும்மா இருக்க மாட்டாங்க.

மல்லிகை: நமக்குள்ள போட்டி,, பொறாமை எதற்கு? இயற்கையோட படைப்பில் நாம எல்லோருமே ஒவ்வொரு வகையில் அழகானவர்கள், மணமானவர்கள், சிறந்தவர்கள் தான்.

பிற மலர்கள்: நாட்டாமை!!! தீர்ப்பை மாத்திடாத!!!

No comments:

Post a Comment