Friday, 23 March 2012

தொலைந்த வாழ்க்கை


        அழுது அழுது கண்களில் நீரே வற்றி விட்டது அவளுக்கு. சாப்பாடு, தூக்கம் ஏதும் இன்றி அழுது கொண்டே இருக்கிறாள். தன் பெற்றோர் எவ்வளவோ கேட்டும் தன் பிரச்சனையை பற்றி எதுவுமே கூறவில்லை. அழுதழுது மயங்கிய அவளை மருத்துவமனையில் சேர்த்தனர். என்ன நடந்தது என்பதை அறிய அவளின் குழந்தையிடம் விசாரித்தனர். 4 வயதே நிரம்பிய அவனுக்கு என்ன சொல்ல தெரியும்.?? இருப்பினும் குழந்தை தன் மழலை மொழியில் “அம்மா!!அம்மா!!! அம்மா வை கெட்ட பாட்டி அடிச்சு போ” னு சொல்லிட்டா..
        குழந்தை சொன்னதில் மாமியாருக்கும் அவளுக்கும் ஏதோ பிரச்சனை என்று உணர்ந்த அவள் பெற்றோர் அவள் உடம்பு சரியான பின்பு அவளின் மாமியார் வீட்டிற்கு சென்று பிரச்சனையை பேசி தீர்த்து விட்டு வரலாம் என முடிவு செய்தனர். சற்று நேரம் கழித்து கண் விளித்து பார்த்தாள் மதி. அவளுக்கு குளுக்கோஸ் போட பட்டு இருந்தது.மறுநாள் அவளை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்து வீட்டில் ஓய்வு எடுக்க வைத்தனர்.
        மாலையில் மதியின் அப்பா விஸ்வநாதன் அவளை அழைத்து சமாதானம் செய்கிறார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் மாப்பிள்ளை உன் மேல் உயிரையே வைத்துள்ளார். எதற்கும் பயப்படாதே. ஒரு வாரம் நன்கு ஓய்வு எடு. நானும் அம்மாவும் வந்து சம்மந்தியிடம் பேசி உன்னை அங்கே விட்டு வருகிறோம் என்று சமாதானம் சொன்னார். எனினும் மதியின் மனது சமாதானம் ஆகவில்லை. அவள் அப்பாவை விட அவள் மாமியாரை பற்றி நன்கு அறிந்தவள். அதோடு பிரச்சனையின் தீவிரத்தை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்து மனதிற்குள்ளேயே அழுதாள். அப்பொழுது மதியின் மாமனாரிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. இங்கு ஒரு பிரச்சனை என்று சீக்கிரம் கிளம்பி வர சொன்னார். என்ன பிரச்சனை என்று தெரியாமலே மதி மேலும் கவலையில் வாடி துடித்தாள். உடனடியாக அவள் மாமியார் வீட்டுக்கு மூவரும் குழந்தையுடன் கிளம்பினர்.
          செல்லும் வழி எல்லாம் மனதிருக்குள்ளேயே அவள் பிரச்சனை அனைத்தும் ஓடியது. மதி வெங்கட் திருமணம் முடிந்து 5 வருடங்கள் ஆகிறது. மதி மேல் வெங்கட்கும் வெங்கட் மேல் மதிக்கும் அளவு கடந்த பிரியம். சொர்க்கத்திலே உருவான ஜோடி என்றே கூற வேண்டும். அவர்கள் குழந்தை விஷயத்திலும் மிகவும் புண்ணியம் செய்தவர்களே. அழகான அறிவான ஆண் குழந்தை ஒன்று அவர்கள் சந்தோஷத்தை அதிக படுத்தியது.மதி குணத்திலும் ஒரு குணவதியாக இருந்தாள். அதனால் மாமனார் நாராயணனுக்கும் அவள் மீது எப்போதும் நல்மதிப்பே இருந்தது.வெங்கட் தங்கை சித்ராவும் அண்ணன்,அண்ணி செல்லமே.
          தான் பார்த்து கட்டி வைத்த பெண் தான் என்றாலும் மதி என்றாள் வெங்கட் அம்மா ஜானகிக்கு எப்போதும் பாகற்காய் தான். தன் பிள்ளையின் மேல் இருந்த அளவு கடந்த பாசமோ என்னவோ மதி என்ன செய்தாலும் குற்றம் என்றே உரைப்பாள். ஆரம்ப காலத்தில் வெங்கட் இதை சரி செய்ய அம்மாவிடம் மதி மேல் தவறில்லை என்று எடுத்து கூறி இருக்கிறான். அதையும் அவள் தப்பாகவே புரிந்து கொண்டு என்னை விட நேற்று வந்தவள் முக்கியமாகி விட்டாளா என்று சண்டைக்கு வருவாள். தான் எடுத்து கூறினால் சண்டை பெருசாகிறது என நினைத்து மதியே தான் குணத்தால் அம்மாவை மாற்றி விடுவாள் என்று நம்பினான். அவள் எவ்வளவோ பொறுமையாக போனாலும் ஜானகி மனம் மாறவே இல்லை.
        நாராயணன் பார்த்த ஆடை ஏற்றுமதி இறக்குமதி தொழிலையே வெங்கட்டும் பார்த்து கொண்டிருந்தான். நன்றாக சென்று கொண்டிருந்த தொழில் திடீரென நஷ்டம் அடைந்தது. இதை நினைத்து நினைத்தே நாராயணன் படுத்த படுக்கை ஆகி விட்டார். சேமிப்பில் இருந்த அனைத்து பணமும் அவரின் மருத்துவ செலவுக்கும் தொழிலை சரி செய்ய முயற்சி செய்தும் செலவானது. தொழிலும் சரியாகவில்லை. அப்பா உடல் நிலையிலும் முன்னேற்றம் இல்லை. வெங்கட் சோர்வாக வீட்டிற்கு வரும் போதெல்லாம் மதி மட்டுமே அவனுக்கு ஆறுதல் அளித்தாள்.
        வீட்டில் ஏற்கனவே நடு வீட்டில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த பிரச்சனை பாய் போட்டு படுத்து கொண்டது போல வெங்கட் தங்கை சித்ரா ஒரு இடியை இறக்கினாள். தான் ஒரு பையனை விரும்புவதாகவும் அவன் இல்லை எனில் தற்கொலை செய்வதாகவும் கூறினாள். அதிர்ச்சியடைந்த வெங்கட்டும் ஜானகியும் அந்த பையனின் பெற்றோரை வீட்டிற்கு வர சொல்லும்படி கூறினார்கள். அந்த பையனின் அப்பா பெரிய பணக்காரர். மிக நல்ல குடும்பமே!!.ஆனால் அவரும் சுயநலக்காரரே. சித்ராவை அவர்கள் வீட்டு மருமகள் ஆக்கி கொள்வதில் அவர்களுக்கு சம்மதமே!! அதோடு அவர்கள் குடும்ப பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதாக கூறினார்கள். எல்லோர் முகத்திலும் சந்தோஷம்!!.
        ஆனால் அது ஒரு நிமிடம் நீடிக்கவில்லை. ஏனெனில் அதற்கு அவர்கள் விலையாக கேட்டது மதியின் வாழ்க்கையை!!அந்த பணக்காரருக்கு ஒரு கால் ஊனமான பெண் ஒருத்தி இருந்தாள். வேறு ஒருவனுக்கு கல்யாணம் செய்து வைத்தாள் அவன் தன்\ மகளை சந்தோஷமாக வைத்திருக்க மாட்டான். பணத்திற்காக மட்டுமே அவளை ஏற்று கொள்வான் என்பது அவரின் எண்ணம். அதனால் அவளை வெங்கட் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே சித்ராவின் திருமணம் நடக்கும் என்றார். வெங்கட் உடனே மறுத்து பேச அவனை அவன் அம்மா ஜானகி அடக்கினாள்.குடும்பத்தில் கலந்து பேசி முடிவு எடுத்து சொல்கிறோம் என்று அவர்களை அனுப்பி வைத்தாள்.
        தன் மகளின் நல்வாழ்க்கைகாகவும் குடும்ப சூழ்நிலைக்காகவும் வேண்டாத மருமகளை விரட்டுவது ஜானகிக்கு பெரிதாக படவில்லை. சித்ராவிற்கு இதில் வருத்தம் தான் என்றாலும் காதலனை விடும் நிலையில் அவள் இல்லை. மதி ஏதும் பேச முடியாதவளாய் அழுதாள். வெங்கட் நிலை தடுமாறி முடிவு எடுக்க முடியாமல் திணறினான். அவனின் முடிவு அனைவரும் அறிந்ததே. ஆனால் அதை அம்மாவும் தங்கையும் ஏற்பதாக இல்லை. வெங்கட் மன நிம்மதிக்காக சற்று நேரம் வெளியில் சென்று விட்டான்.அந்த நேரம் பார்த்து ஜானகி தன் மருமகளை திட்டி நீ வீட்டில் இருக்கும் வரை அவன் இன்னொரு திருமணத்திற்கு ஒதுக்கமாட்டான். நீ வீட்டில் இருந்து தொலைந்தால் தான் அவன் மனதை என்னால் மாற்ற முடியும் என்று கூறினாள். அதற்கு ஒத்துழைக்காத அவளை அடித்து குழந்தையுடன் வெளியில் தள்ளி கதவை பூட்டினாள்.
        என்ன செய்வதென்று அறியாத அவள் பொது தொலைபேசி நிலையத்தில் இருந்து வெங்கட் அலைபேசிக்கு அழைத்தாள். ஆனால் அவனோ அலைபேசியில் கூட அவனுக்கு நிம்மதி கிடைக்காது என்று எடுக்கவில்லை. காத்திருந்தும் வெங்கட் வருவதாக இல்லை. குழந்தையை கூட்டி கொண்டு தன் பிறந்த வீட்டிற்கு கிளம்பினாள் மதி.தன் கணவன் தன்னை கூட்டி செல்ல வருவான் என்ற நம்பிக்கையில்.யோசித்து முடிக்கும் போதே அவன் கணவன் வீடும் வந்தது. வந்த பின் தான் நடந்த அந்த கொடிய விஷயம் அவளுக்கு தெரிந்தது.
இரவு வீட்டிற்கு வந்த வெங்கட் விஷயம் அறிந்து மனைவியை கூட்டி வர கிளம்பினான்.அதை தடுக்க நினைத்து மண்ணெண்ணையுடன் வந்து நின்றாள் ஜானகி.தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினாள். அவன் நிலை குலைந்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் இருந்தான். இந்நிலையில் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டாள் ஜானகி. கல்யாண ஏற்பாடுகளை மிக பிரம்மாதமாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள்.
       இந்நிலையில், தங்கைக்கு அவள் நினைத்த வாழ்க்கையை அமைத்து கொடுப்பதா?, அப்பாவின் உடல் நிலையை சரி செய்ய உதவுவதா,? அம்மாவின் மிரட்டலை சமாளிப்பதா,? குடும்ப சூழ்நிலைக்காக தன்னையே விற்பதா??? எல்லாவற்றிற்கும் மேலாக தன்னையே நம்பி வந்த மதியையும், அவன் குழந்தையும் நினைத்து ஏங்கினான். அவன் அவளுக்கு கனவில் கூட துரோகம் செய்ய விரும்பாதவன். எப்படி நிஜத்தில் செய்வான்? அவர்கள் எல்லாம் அவனை மிரட்டுவதற்கு பயன்படுத்திய ஆயுதத்தை கையில் எடுத்தான். ஆம்!! தற்கொலை தான்\ தன் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே முடிவு என்று எண்ணி தன் கதையை தானே முடித்து கொண்டான்.
      எந்த பிரச்சனைக்கும் தற்கொலை முடிவு அல்ல. அந்த ஒரு நொடி நேர தப்பான முடிவினால் அவனுக்கு மட்டுமே ஒரு முடிவு கிடைத்தது. அவனையே நம்பி வந்த மதி தன் குழந்தையுடன் ஆதரவின்றி நின்றாள். அவன் குடும்பத்தை பார்த்து கொள்ளவும் யாரும் இல்லை இப்போது!! அனைத்து பிரச்சனைகளுக்கும் அவன் அம்மாவின் பேராசையும், அவனின் அவசர முடிவும் மட்டுமே காரணம்.......

No comments:

Post a Comment