Wednesday, 7 November 2012

மைனர் செயினும் பாப்பாத்தி குளமும்


கௌதம் டீன் ஏஜ் எட்டி பார்க்க காத்திருக்கும் வயது... சிறு வயது முதலே சுட்டி.. நல்லூர் கிராமத்தின் இளம் சீயான் இவன் தான்... அப்புறம் என்ன இவன் தான் நம்ம கதையோட ஹீரோ னு தெரிஞ்சு போச்சு.. அப்போ அவனை சுத்தி 4 நண்பர்கள் கூட்டம் வேணாமா.. ராஜா. எல்லா குரூப் ல யும் ராஜா னு ஒருத்தன் இருப்பாங்க. அது நம்ம தமிழ்நாட்டோட பாரம்பரிய பேர் ஆச்சே. இவனும் கௌதமுக்கு கொஞ்சமும் சளைச்சவன் இல்லை. எல்லா அலம்பலும் இவனும் சேர்ந்து தான் பண்ணுவான். அப்புறம் 2 டம்மி பீஸ். கணேஷ், சுரேஷ் 2 பேரும் இவங்க கூட தான் இருப்பாங்க. ஆனா இருக்கிற இடமே தெரியாது. கௌதம், ராஜா பண்ற தப்புக்கு மாட்டுறது என்னவோ இந்த 2 அடிமைகள் தான். 4 பேரும் ஒரே பள்ளியில் 11 வது படிக்கிறாங்க. இவங்க எல்லாம் புக்கை எடுத்து படிச்ச நேரத்தை விட குளத்துல குதிச்ச நேரம் தான் அதிகம், எதுக்குன்னு பார்க்குறீங்களா?? அவங்க ஊர் பாப்பாத்தி குளத்துல குளிக்கிறதுல அவ்வளவு இஷ்டம். வேற எங்க குளிச்சாலும் குளிச்ச ஒரு உணர்வே இருக்காது அவங்களுக்கு.. 

அன்றைக்கும் அப்படி தான் 4 பேரும் கிளம்பி குளிக்க போனாங்க. இவங்க கூட குளிக்க வந்த எல்லாரும் ஆடு, மாடு எல்லாத்தையும் குளிப்பாட்டி, ஒரு மூட்டை துணியை துவைச்சு முடிச்சு, குளிச்சு வீட்டுக்கு போனாலும் இவனுக மட்டும் குளத்துல ஊறிக்கிட்டே இருந்தாணுக.. ஒரு வழியா வீட்டுக்கு கிளம்ப மனசு வந்து அவரவர் வீட்டுக்கு போனாங்க. கௌதம் உள்ளே நுழையும் போதே “இவ்வளவு நேரமா டா. சரி. சரி. இங்க வா. தலையை கூட ஒழுங்கா காய வைக்கலை” என சொல்லிக்கொண்டே அவன் கழுத்தில் கிடந்த துண்டை எடுத்து துடைத்து விட்டார் அவன் அப்பா. அப்போது தான் அவன் கழுத்தில் கிடந்த செயினை காணாமல் போனதை கவனித்தார். 

“எங்க டா செயின்?” என வினவ அவன் திரு திருவென விழித்தான். இவ்வளவு சேட்டை பண்ற கௌதமுக்கு அவங்க அப்பானாலே பேஸ்மென்ட் வீக் ஆயிடும். 

“குளத்திலே தொலைச்சுட்டு வந்துட்டியா ராஸ்கல்?பவுன் என்ன விலை விக்குது தெரியுமா? 2 பவுன் செயின் டா அது. ஆசையா உனக்கு வாங்கி போட்டா இப்புடி தொலைச்சுட்டு வந்து நிக்குறியே. என் கண்ணு முன்னாடி நிக்காத. போ. போயி தேடி எடுத்துக்கிட்டு வா “ என அனுப்பி விட்டார். அதன் பின்னும் இவருக்கு மனம் ஆறவில்லை. தன் வேலையாட்களை அழைத்துக் கொண்டு பாப்பாத்தி குளத்திற்கு சென்று தேட ஆரம்பித்தார். 

கௌதம் தன் நண்பர்கள் நால்வரையும் வீட்டிற்கு சென்று அழைத்துக் கொண்டு வர ஒன்றரை மணி நேரம் ஆனது. அது வரை வேலையாட்கள் அனைவரும் குளத்தையே அலசி ஆராய்ந்து பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. வர்ற வழியில் சுரேஷ் கூறிய பின் தான் கௌதமுக்கு நினைவுக்கு வந்தது. குளிக்க போகும் முன் செயினை கழற்றிய சட்டை பையில் வைத்தது. வீட்டுக்கு போயி அப்பாக்கிட்ட சொல்லலாம் என போகிற வழியில் குளத்தின் கரையில் அவன் அப்பா நின்று கொண்டிருந்தார். வேலையாட்கள் உள்ளே தேடுவதையும் பார்த்து அதிர்ந்த கௌதம் “இப்போ போயி அப்பாக்கிட்ட சொன்னா நல்லா அடி விழும். இப்போ என்ன செய்யுறது டா” எனக் குழம்பிக் கொண்டிருந்தான். 

அதற்குள் அவன் அப்பா அவனை பார்த்து “டேய் எருமை மாடு!! செயினை தொலைச்சுட்டு எங்க ஊரு சுத்துற!! செயினை தேட சொல்லி அனுப்பினா இவனுகளோட என்ன டா மீட்டிங்.? இவனுக தான் டா உன்னையை கெடுக்கிறது.” என்று மறுபடி அர்ச்சனையை ஆரம்பித்தார்
.
இதுல இருந்து தப்பிக்க என்ன பண்ணலாம்’னு யோசிச்சவன் தீடீரென்று போட்ட சட்டையுடன் குளத்தில் இறங்கினான். ஒரு கால் மணி நேரம் கழித்து மேலே வந்து “செயின் கிடைச்சுருச்சு பா” எனக் கொண்டு வந்து கொடுத்தான். “இவ்வளவு நேரமா நாங்க தேடுறோம். எங்களுக்கு கிடைக்கலை” என யோசித்தவர் “சரி எப்படியோ கிடைச்சுருச்சு. அதுவே போதும்” என நிம்மதியுடன் வீட்டிற்கு கிளம்பினார். ஒண்ணும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கௌதமும் கிளம்பினான். இப்படி ஒரு சம்பவத்துக்கு பின்னாடியும் கௌதம் பாப்பாத்தி குளத்தையும் விடலை. அவனோட மைனர் செயினையும் கழட்டலை... 

1 comment:

  1. இது இந்தக் கதையினைப் பற்றியது அல்ல.
    "Welcome to my blog; thank;)"அப்படினு gadget போட்டிருக்கீங்களே, அது தங்களுடைய படைப்பினை சிரமத்துடன் படிக்கச் செய்கிறது. ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்ய முடிந்தால் நன்றாய் இருக்கும் என்று கருதுகிறேன்.

    ReplyDelete